கலெக்டர் வினீத் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை
கலெக்டர் வினீத் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் 229 பேருக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சுதந்திர தின விழா
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேற்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தேசிய கொடியை கலெக்டர் வினீத் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.
மாநகர போலீஸ் ஆணையரகத்துக்கு உட்பட்ட 53 போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உட்பட்ட 40 போலீசார் ஆகியோருக்கு சிறந்த காவலர்களாக பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் 165 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
229 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
விழாவில் வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 229 பேருக்கு ரூ.1 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, குமார் நகர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பூலுவப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் என 375 மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சார்பில் மோப்பநாய்கள் சாகசம் செய்து அசத்தியது. போதைப்பொருளை கண்டுபிடிப்பது, திருடர்களை கவ்விப்பிடிப்பது உள்ளிட்டவற்றை மோப்ப நாய்கள் செய்து காட்டின. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஊர்க்காவல் படையை சேர்ந்த ஆறுமுகம் தலைமையில் பேண்டு வாத்தியங்கள் இசைத்தனர்.
அதிகாரிகள் பங்கேற்றனர்
விழாவில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் அபினவ்குமார், வனிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், ஆர்.டி.ஓ.க்கள் பண்டரிநாதன் (திருப்பூர்), ஜஸ்வந்த் கண்ணன் (உடுமலை), குமரேசன் (தாராபுரம்), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன், துணை கலெக்டர்கள், அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
--------------
(பாக்ஸ்)
கைக்குழந்தையுடன் கலெக்டரிடம் முறையிட்ட பெண்
சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின்னர், அணிவகுப்பை பார்வையிட ஜீப்பில் ஏறி புறப்பட முயன்றார். அப்போது மைதானத்தில் பொதுமக்கள் இருந்த பகுதியில் இருந்து கைக்குழந்தையுடன் ஒரு பெண் ஓடி வந்து, கலெக்டரிடம் பேச முயன்றார். தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டார். இதை கவனித்த கலெக்டர், அந்த பெண்ணை காத்திருக்குமாறு கூறிவிட்டு, ஜீப்பில் ஏறி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதன்பிறகு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு விசாரித்தனர். அந்த பெண் திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த ஷாலினி (வயது22) தனது 3 வயது குழந்தையுடன் வந்ததும் தெரியவந்தது. கன்னியாகுமரியில் வசித்தபோது அவருடைய கணவர் இறந்து விட்டார். அதன்பிறகு திருப்பூரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தனது கணவருக்கு வாரிசு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் உள்ளதாகவும், அவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கூறி அந்த பெண்ணுக்கு உதவுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
----