சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை- கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடு நடவடிக்கை குறித்்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசியதாவது:-
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவுக்கு நெல்லை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவார்கள். அவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கு பேரூராட்சி மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் மூலம் தேவையான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். குடிநீர் வசதிக்காக பெரிய அளவிலான சின்டெக்ஸ் தொட்டிகளை அமைக்க வேண்டும். தற்காலிக சுகாதார வளாகங்களை அமைக்க வேண்டும்.
முககவசம்
ஏற்கனவே கோவில் பகுதிகளில் உள்ள சுகாதார வளாகங்களை பராமரிப்பு செய்திட வேண்டும். பெரிய அளவிலான குப்பை தொட்டிகளை வைத்திட வேண்டும். தினமும் விரைவாக குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களை அமைக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம், கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும். அரசு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு பஸ்களில் பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகளை இலவசமாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். காவல்துறையின் மூலம் தேவையான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு வரும்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து, கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.