வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்ட கலெக்டர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் சம்பா நடவு வயல்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. இந்தநிலையில் குருவாடி பகுதியில் வடிக்கால் வாய்க்கால்களை சீரமைக்காததால் சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனர்.
இந்தநிலையில், குருவாடி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு சென்ற மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகள் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கலெக்டரிடம் எடுத்து கூறினார்கள். மேலும் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனைதொடர்ந்து வடிக்கால் வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், மழைநீர் வடிந்தவுடன் வேளாண்மை துறை மூலம் கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.