கருக்கலைப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கைதனியார் மருத்துவமனைகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் கருக்கலைப்பு செய்யும் தனியார் மருத்துவமனைகள், நுண்கதிர்வலை மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான மாதாந்திர பணி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் நுண்கதிர்வலை உரிமம் பெற்ற சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் நுண்கதிர்வலை மையங்கள், அரசு விதிகளுக்கு எதிராகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டு கர்ப்பிணி தாயின் வயிற்றில் உள்ள சிசு பாலினத்தேர்வு செய்யப்பட்ட 13 முதல் 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யப்படுவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இச்செயலானது நம்முடைய சமூகநீதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியது மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.
கடும் நடவடிக்கை
எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் நுண்கதிர்வலை மையங்கள் குறித்து தகவல் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் நுண்கதிர்வலை மையங்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பாக வல்லம், முருக்கேரி, வளத்தி, சத்தியமங்கலம், முகையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண், பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் மாவட்ட சராசரியை விட குறைவாக உள்ளது. எனவே அப்பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் மிகுந்த விழிப்போடும் மற்றும் கண்டிப்போடும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.