பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்.
வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்.
பாடம் நடத்திய கலெக்டர்
வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் (பொறுப்பு) குணசேகரனிடம் கேட்டறிந்தார். பின்னர் வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின் கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டது. அதனை உடனடியாக சுத்தம் செய்யும்படியும், தினமும் 2 முறை கழிப்பறையை தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்தி சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று மாநகராட்சி அலுவலரிடம் அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர், வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை நேரில் பார்வையிட்டார். பள்ளி மாணவரிடம் சில கேள்விகளை கேட்டு அவர்களுடைய கல்வி தரம் எப்படி உள்ளது என்பதை ஆராய்ந்தார். பிளஸ்-2 வகுப்பிற்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கலெக்டர் நடத்தினார்.
மேலும் பொதுத்தேர்வின்போது எவ்வித அச்சமும் இன்றி கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முறை, அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்று பல ஆலோசனைகள் வழங்கினார். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து பாடங்கள் படித்தால், அவை மனதில் நிற்கும் என்று கூறினார்.
அங்கன்வாடி மையத்தில் ஆய்வு
பின்னர் பள்ளியில் சமைக்கப்பட்ட மதிய உணவை கலெக்டர் சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். பள்ளி நுழைவுவாயில் அருகே சேதமடைந்து காணப்பட்ட குடிநீர் குழாய்களை உடனடியாக மாற்றும்படி கலெக்டர் கூறினார். அப்போது ஆசிரியர்கள் எத்தனை முறை மாற்றினாலும் மாணவர்கள் குழாய்களை உடைத்து விடுகின்றனர் என்று தெரிவித்தனர்.
அதற்கு கலெக்டர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாணவர்கள் வசதிக்காக 50 மேஜை, நாற்காலிகள் வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கலெக்டர் உறுதியளித்தார்.
அதைத்தொடர்ந்து வேலூர் அலமேலுரங்காபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கும்படி மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா, சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.