2 லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
2 லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவருக்கு கலெக்டர் பாராட்டு தொிவித்துள்ளாா்.
ஈரோடு அரசு மாதிரி பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் எஸ்.பி.மேகன், உரம் மற்றும் விதைகளின் மூலம் விதைப்பந்துகளை தயாரித்துள்ளார். இந்த விதை பந்துகளுக்கான விதைகளை பள்ளிக்கூட மாணவ -மாணவிகளிடம் இருந்து வீட்டில் உள்ள பலாப்பழம், சீத்தாபழம், சப்போட்டா பழம் மற்றும் நாவல்பழம் உள்ளிட்ட பழங்களில் உள்ள விதைகளை பெற்றுள்ளார். இந்த விதை பந்துகளை காலியான இடத்தில் வீசி எறியும்போது மழை அல்லது நீரின் மூலமாக வளர்கிறது. இந்த மாணவர் கடந்த 3 ஆண்டுகளாக சுமார் 2 லட்சம் விதைப்பந்துகளை அவரது பெற்றோரின் உதவியுடன் உருவாக்கி உள்ளார்.
இவர் உருவாக்கிய விதை பந்துகளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கு வழங்கி உள்ளார். மேலும் இந்த மாணவர் வனப்பந்து என்ற தலைப்பிலான புத்தகத்தையும் எழுதி உள்ளார். இந்த மாணவரின் செயலை, ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதுபோன்ற விழிப்புணர்வை மற்ற மாணவ -மாணவிகளிடம் ஏற்படுத்துவதுடன், பள்ளிக்கூடங்களில் மாணவ -மாணவிகளின் முழு ஈடுபாட்டுடன் நர்சரி பூங்காக்களை வளர்க்க வேண்டுமென கல்வித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ் மற்றும் மாணவரின் தந்தை ஆகியோர் உடன் இருந்தனர்.