அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் ஆய்வு
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங்கில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின் விளக்குகள், நிழற்பந்தல் போன்றவை அமைப்பது குறித்து பார்வையிட்டார்.
தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்தி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சாமி தரிசனம் செய்ய வரிசை அமைப்பது குறித்தும், தற்காலிக தீயணைப்பு நிலையம் அமைய உள்ள இடம் குறித்து, கோவில் ஒத்தவாடை தெருக்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மற்றும் அருணாசலேஸ்வரர் கோவில் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.