கட்டணம் செலுத்தாததால் கலெக்டர் அலுவலக ஆதார் மையத்துக்கு மின் இணைப்பு துண்டிப்பு; தற்காலிகமாக மையம் வேறு இடத்துக்கு மாற்றம்
மின் கட்டணம் செலுத்தாததால் கலெக்டர் அலுவலக ஆதார் மையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஆதார் மையம் இடமாற்றம் செய்யப்பட்டது.
நாகர்கோவில்,
மின் கட்டணம் செலுத்தாததால் கலெக்டர் அலுவலக ஆதார் மையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஆதார் மையம் இடமாற்றம் செய்யப்பட்டது.
ஆதார் மையம்
குமரி மாவட்ட மக்கள் தங்களது ஆதார் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ளவும், புதிதாக ஆதார் கார்டு எடுக்கவும் வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. முதலில் ஆதார் மையம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே செயல்பட்டு வந்தது. அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் இந்த மைய அலுவலகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் கருவூலக கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து ஆதார் திருத்தம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கருவூலக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மைய அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆதார் மையம் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.
இடமாற்றம்
இதைத் தொடர்ந்து தற்காலிகமாக அடுத்த கட்ட நடவடிக்கையாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே ஏற்கனவே செயல்பட்ட இடத்துக்கு ஆதார் மையம் மாற்றப்பட்டது. அங்கு ஆதார் திருத்தம் செய்யும் பணிகள் நேற்று நடந்தது.
ஆனால் ஆதார் மையத்திற்கு வந்த பொதுமக்கள் வழக்கம்போல் கருவூலகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள கட்டிடத்துக்கு சென்றனர். அங்கு அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் விசாரித்தபோது கலெக்டர் அலுவலக முன் பகுதியில் ஆதார் மையம் செயல்படுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆதார் மையத்திற்கு வந்து புகைப்படம் எடுத்தல் மற்றும் பெயர் திருத்தம் பணிகளை மேற்கொண்டனர். இது பொதுமக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது.
போலீசார் அவதி
தற்போது ஆதார் மையம் மாற்றப்பட்டுள்ள அறை கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் ஓய்வு எடுக்கும் அறையாக இருந்தது. இந்தநிலையில் திடீரென ஆதார் மையம் மாற்றப்பட்டதால் அந்த அறையில் போலீசார் வைத்திருந்த உடமைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன.
இதனால் பெண் போலீசார் தங்களது உடமைகளை நுழைவு வாயில் முன்புள்ள அரச மரத்துக்கு அடியில் வைத்தனர். போலீசாரின் ஓய்வு அறைக்கு ஆதார் மையம் மாற்றப்பட்டதால் பெண் போலீசார் பெரிதும் அவதி அடைந்தனர்.