சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு


சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
x

வேலூர் ஆற்காடு சாலையில் சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர்

வேலூர் ஆற்காடு சாலையில் சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

ஆற்காடு சாலை

வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளியூர் நோயாளிகள் ஆற்காடு ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இவர்கள் மருத்துவமனைக்கு சென்று வருவதால் ஆற்காடு சாலையில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஒருவழிப்பாதை, சாலைகளில் தற்காலிகத் தடுப்புகள் என பல்வேறு மாற்றங்கள் செய்தாலும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு இல்லாமல் இருந்து வருகிறது. மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சுரங்க நடைபாதை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு

வேலூர் மக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் ஆற்காடு ரோட்டில் மருத்துவமனை முன்பு சுரங்க நடைபாதை அமைப்பதற்கு முதல்கட்டமாக திட்ட அறிக்கை தயார் செய்ய அரசு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தநிலையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் ஆற்காடு ரோட்டில் மருத்துவமனை முன்பு சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். சுரங்க நடைபாதை எந்த இடத்தில் அமைத்தால் வசதியாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் சுரங்கப்பாதை அமைக்க இடம் அளிப்பது குறித்தும் எந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்தனர்.

விரைவில் தொடங்கும்

இதுகுறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், ஆற்காடு ரோட்டில் மருத்துவமனை முன்பு சுரங்க நடைபாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் சுரங்க நடைபாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.

ஆய்வின் போது கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


நோயாளிகள் செல்லும் வகையில் அமைக்க வேண்டும்

ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கநடைபாதை அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால் அமைக்கப்படும் சுரங்கநடைபாதையை நோயாளிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். இந்த சுரங்க நடைபாதையை பெரும்பாலும் நோயாளிகள் தான் பயன்படுத்த உள்ளனர். படிக்கட்டுகளுடன் அமைத்தால் நோயாளிகள் செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே அவர்கள் எளிதில் செல்லும் வகையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் சுரங்க நடைபாதை அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Related Tags :
Next Story