மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்பட்டுவரும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளிகளில் கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார். பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான நடுநிலைப்பள்ளியில், மாணவ-மாணவிகள் பிரெய்லி உபகரணத்தின் மூலம் தமிழில் எழுதுவதையும், பிரெய்லி முறை மூலமாக எழுதப்பட்டதை வாசிப்பதையும், கல்வி கற்கும் முறையினையும், பிரெய்லி முறை மூலமாக கணினியை மாணவர்கள் பயன்படுத்தி தட்டச்சு செய்வது குறித்தும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலமாக மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த வேண்டும் என ஆசிரியர்களிடம் கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். அதன்பின்னர் புதுக்கோட்டை நகராட்சி, எழில்நகர் பகுதியில் செயல்பட்டுவரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ப்ளாசம் சிறப்பு பள்ளியினை பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் குறித்தும், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி முறைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இந்தநிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.