நீலகிரியில் கல்லூரி கனவு திட்டம்


நீலகிரியில் கல்லூரி கனவு திட்டம்
x

நீலகிரியில் கல்லூரி கனவு திட்டத்தை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் கல்லூரி கனவு திட்டத்தை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

கல்லூரி கனவு திட்டம்

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரி கனவு' என்ற திட்ட தொடக்க விழா, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். திட்டத்தை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

இத்திட்டத்தின் மூலம் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படிப்பது, என்னென்ன பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் உள்ளன, கல்லூரிகளை எப்படி தேர்ந்தெடுப்பது, எதிர்காலத்தில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ள சிறந்த கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

விழிப்புணர்வு

இதன் நோக்கம், மாணவ-மாணவிகள் தங்களது எதிர்கால குறிக்கோள்களை திட்டமிட செய்வதும், அதில் வெற்றி பெற செய்வதும் ஆகும். நீலகிரி மாவட்டத்தில் 36 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 17 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளது. இந்த கல்லூரி கனவு திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 1 பள்ளிக்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் 530 மாணவ-மாணவிகள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர் வீதம் 100 பெற்றோர் கலந்து கொள்கிறார்கள்.

கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வணிகம், கணக்கு பதிவியல், சட்ட படிப்பு, கல்வி ஊக்குவிப்பு, வங்கிகளின் கல்வி கடன், போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

குன்னூரில் கல்லூரி

அடுத்த ஆண்டு(2023) குன்னூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று உயர் கல்வி துறையில் கேட்டு உள்ளேன். கலெக்டர் தேர்வு செய்யும் நிலத்தின் விவரம் பெற்று, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு வழிகாட்டும் புத்தகம் வழங்கப்பட்டது.விழாவில் குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஷ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன்(ஊட்டி), சுனிதா நேரு (குன்னூர்), கீர்த்தனா (கூடலூர்), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தாமோதரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் புனிதா, அந்தோணியம்மாள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story