சேலம் கோரிமேட்டில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு-கல்லூரி பேராசிரியர் குடும்பத்துடன் உயிர் தப்பினார்


சேலம் கோரிமேட்டில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு-கல்லூரி பேராசிரியர் குடும்பத்துடன் உயிர் தப்பினார்
x

சேலம் கோரிமேட்டில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தனியார் கல்லூரி பேராசிரியர் குடும்பத்தினருடன் உயிர்தப்பினார்.

சேலம்

கன்னங்குறிச்சி:

கல்லூரி உதவி பேராசிரியர்

சேலம் மாவட்டம் மேட்டூர் ஆர்.எஸ்.கவிபுரத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 34). இவர், தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யா. இவர்களுக்கு ஸ்ரீநிஷா (2) என்ற குழந்தை உள்ளது.

நேற்று மாலை கோகுல்ராஜ் தனது காரில் மனைவி, குழந்தையுடன் சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் ஏற்காடு மலை அடிவாரம் பகுதிக்கு சென்று சிறிது நேரம் காரில் இருந்தபடி சுற்றி பார்த்தனர்.

கார் தீப்பிடித்தது

அதன்பிறகு அவர்கள் ஊருக்கு செல்வதற்காக ஏற்காடு மெயின் ரோட்டில் அஸ்தம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, மத்திய சட்டக்கல்லூரி அருகே கார் வந்தபோது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோகுல்ராஜ் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தனது மனைவி மற்றும் மகளை வெளியே வருமாறு அறிவுறுத்தினார். இதனால் அவர்கள் வேகமாக காரில் இருந்து இறங்கி சற்று தூரமாக சென்றனர்.

பின்னர் சிறிது நேரத்தில் திடீரென காரில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. காரின் டயர்கள் மற்றும் உள்ளே இருந்த கண்ணாடிகள் வெடித்து சிதறியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கார் தீப்பிடித்து எரிவதை வேடிக்கை பார்த்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீயில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் சேலம்-ஏற்காடு மெயின்ரோட்டில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரில் புகை வந்தவுடன் கோகுல்ராஜ் சாமர்த்தியமாக காரை நிறுத்திவிட்டு மனைவி மற்றும் மகளுடன் கீழே இறங்கியதால் அவர்கள் உயிர்தப்பினர். காரில் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், கார் தீ விபத்து குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story