முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது


முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது
x

ஆற்காடு அருகே நடந்த முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

முன்னாள் ராணுவ வீரர் கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இசையனூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 36). முன்னாள் ராணுவ வீரர். இவரது தம்பி கோபி. இவரும் முன்னாள் ராணுவ வீரர். இவர் காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி ரம்யா, மாமியார் சரஸ்வதி, செங்கல்பட்டு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வரும் மைத்துனர் கிஷோர் ஆகிய மூன்று பேரும் கடந்த 14-ந்் தேதி இசையனூரில் உள்ள குணசீலன் வீட்டிற்கு சென்றனர். கோபி கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவர் இசையனூர் வந்தாரா என கேட்டுள்ளனர்.

இதில் குணசீலனுக்கும், ரம்யா குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ரம்யாவின் தம்பி கிஷோர், குணசீலனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த குணசீலன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கல்லூரி மாணவர் கைது

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ரம்யா (வயது 25), அவரது தாய் சரஸ்வதி (55) ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் மகளிர் சிலையில் அடைத்தனர். கல்லூரி மாணவர் கிஷோரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று ஆற்காடு கோர்ட்டில் ஆஜர் படுத்த ரம்யா மற்றும் அவரது தாய் சரஸ்வதி ஆகியோரை போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது அவர்களை பார்க்க ஆற்காட்டில் உள்ள செய்யாறு கூட்ரோட்டில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் கிஷோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story