சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியானதால் பிளேடால் கழுத்தை அறுத்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியானதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
கல்லூரி மாணவி
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி கல்லூரி விடுதியில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த சக மாணவிகள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர் ஒருவர் போலியாக மாணவி பெயரில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கணக்கு தொடங்கி அதில் மாணவியின் புகைப்படத்தை வைத்து அடிக்கடி குறுஞ்செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். இதை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
வழக்குப்பதிவு
பின்னர் அந்த குறுஞ்செய்திகளை அழிக்க மாணவி முயற்சி செய்தார். ஆனால் குறுஞ்செய்திகள் அழியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். பின்னர் மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலியாக கணக்கு தொடங்கி குறுஞ்செய்தியை அனுப்பி அதை சமூக வலைத்தளங்களில் பரப்பிய மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.