கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தரகம்பட்டி அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர்
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள மேலப்பகுதி ஊராட்சி கரிச்சிபட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேஸ்வரன் (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் யோகேஸ்வரனுக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று சரியாகவில்லை.
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று யோகேஸ்வரன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து ஒரு அறையில் உள்பக்கமாக பூட்டி கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள் நீண்ட நேரம் கூப்பிட்டும் கதவை திறக்கவில்லை.
பின்னர் அக்கம், பக்கத்தினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது யோகேஸ்வரன் சேலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் யோகேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, யோகேஸ்வரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.