கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சம்பத். இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 21). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிரியதர்ஷினி நேற்று முன்தினம் வீட்டில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் உடை மீது டீ கொட்டியது. இதனால் அவர் அந்த உடையை மாற்றுவதற்கு தனது அறைக்கு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டில் இருந்தவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது பிரியதர்ஷினி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பிரியதர்ஷினியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பரிதாபமாக இறந்தார்
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிரியதர்ஷினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.