துப்பட்டாவால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
களக்காடு அருகே, பெற்றோர் சிரமப்பட்டு கல்வி கட்டணம் செலுத்தியதால் வேதனை அடைந்த கல்லூரி மாணவி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
களக்காடு:
களக்காடு அருகே, பெற்றோர் சிரமப்பட்டு கல்வி கட்டணம் செலுத்தியதால் வேதனை அடைந்த கல்லூரி மாணவி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
கல்லூரி மாணவி
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 53), எலக்ட்ரீசியன்.
இவருக்கு பாப்பா (18) என்ற மகளும், 2 மகன்களும் இருந்தனர்.
இதில் பாப்பா, நெல்லை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாக செலுத்தினார்.
பணமின்றி தவிப்பு
முத்துக்குமார் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த போதிலும் குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்தார். ஆனாலும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து கல்லூரியில் செலுத்தியதாக கூறப்படுகிறது.
தனது படிப்பு செலவுக்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை பார்த்து பாப்பா மன வேதனை அடைந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த பாப்பா கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். பின்னர் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்திற்கு பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய முத்துக்குமாரும், அவரது மனைவியும் கதவு உள்புறமாக பூட்டி இருந்ததை பார்த்து திடுக்கிட்டனர். பின்னர் கதவை குச்சியால் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பாப்பா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர்.
உருக்கமான கடிதம்
இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பாப்பாவின் கைப்பையை சோதனையிட்டனர். அதில் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர், தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன், என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கல்லூரி கட்டணம் செலுத்த பெற்றோர் சிரமப்பட்டதால் வேதனை அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.