ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை
குழித்துறையில் மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
குழித்துறையில் மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ரெயில் முன்பாய்ந்து தற்கொலை
குழித்துறை ரெயில்வே ஆற்றுப்பாலம் அருகே தண்டவாளத்தில் நேற்று இரவு ஒரு வாலிபரின் பிணம் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது பிணமாக கிடந்தவர் விளவங்கோடு ஓடையன்விளை சேர்ந்த ரெஜிஸ்குமார் என்பவரின் மகன் ரெதின் ரெதிஸ் ஜெயந்தி ரோஜர் (வயது 22) என்பதும், அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
2-ம் ஆண்டு கல்லூரி மாணவர்
தற்கொலை செய்த ரெதின் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்த நிலையில் அவர் நேற்று மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதை அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ரெதின் குழித்துறை ரெயில்வே ஆற்றுப்பாலம் பகுதிக்கு சென்று அந்த வழியாக வந்த கொல்லம்- நாகர்கோவில் பயணிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து ரெதின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.