தலைக்குப்புற கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி; நண்பர்கள் 3 பேர் படுகாயம்
பழனியில் தலைக்குப்புற கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பழனியில் தலைக்குப்புற கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தலைக்குப்புற கவிழ்ந்த கார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. அவருடைய மகன் மூர்த்தி (வயது 20). இவர், பழனியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் மூர்த்தி தனது கல்லூரி நண்பர்களான திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த பவித்ரன் (20), சத்திரப்பட்டியை சேர்ந்த இளமதி (18), கருப்பணன் (18) ஆகியோருடன் நேற்று காரில் பழனியில் இருந்து தேக்கந்தோட்டம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த காரை கருப்பணன் ஓட்டினார்.
பழனி வரட்டாறு பாலம் பகுதியில் சென்றபோது, திடீரென்று கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
மாணவர் பலி
இந்த விபத்தில், காரின் இடிபாடுகளில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் அபயகுரல் எழுப்பினர். இதில், மூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பவித்ரன், இளமதி, கருப்பணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக பழனி அடிவாரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது விபத்தில் காயமடைந்த 3 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைக்குப்புற கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியது.