படகிலிருந்து ஓடையில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் சாவு
தூத்துக்குடியில் படகிலிருந்து ஓடையில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
தூத்துக்குடியில் படகிலிருந்து ஓடையில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர்
தூத்துக்குடி பாத்திமாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி. இவருடைய மகன் ஜெனிஸ்டோ (வயது 19). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தருவை மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வந்து உள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியில் சென்றாராம். அவர்கள் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடலில் கலக்க கூடிய உப்பாற்று ஓடையில் சிறிய படகில் சென்றார்களாம். அப்போது அவர்கள் படகில் விளையாடியவாறு சென்றதாக கூறப்படுகிறது.
சாவு
இதில் எதிர்பாராதவிதமாக ஜெனிஸ்டோ படகிலிருந்து தவறி ஓடையில் விழுந்து விட்டாராம். உடனடியாக நண்பர்கள் அவரை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கியதால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தெர்மல்நகர் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஓடை பகுதியில் தீவிரமாக தேடிப்பார்த்தனர். ஆனால் வீரர்களாலும் உடனடியாக அவரை மீட்க முடியவில்லை. இதனால் நேற்று அதிகாலையில் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் ஓடையில் தேடினர். அப்போது, ஓடையில் இருந்த ஒரு பாறையில் மோதிய ரத்த காயத்துடன் இறந்த நிலையில் கிடந்த ஜெனிஸ்டோ உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.