கெங்கவல்லி அருகே பரிதாபம்கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் சாவுபோலீஸ் விசாரணை
கெங்கவல்லி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்..
கெங்கவல்லி,
கல்லூரி மாணவர்
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஆத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் நிவேஸ் (வயது 19). தலைவாசல் அருகே உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். நிவேஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதற்காக பெங்களூரூவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மதியம் 2 மணி அளவில் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு நீண்டநேரம் ஆகியும் மகனை காணாததால் ஜெயபாலும், அவருடைய மனைவியும் தேடினர்.
கிணற்றில் மூழ்கி சாவு
இதற்கிடையே நடுவலூரில் ஜெயபாலுக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றின் அருகில் நிவேஸ் செருப்பு கிடந்துள்ளது. உடனே கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் வேலுமணி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். மேலும் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். கிணற்றில் மூழ்கி பலியான நிவேஸ் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸ் சப்-இன்்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். நிவேஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிவேஸ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவர், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. உடல்நலம் பாதிப்பால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.