கல்லூரி மாணவர் பரிதாப சாவு
தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
கல்லூரி மாணவர்
தேனி அருகே உள்ள பள்ளப்பட்டி மரியாயிபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி. அவருடைய மகன் மயில்ராஜ் (வயது 20). இவர், வீரபாண்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர், கொடுவிலார்பட்டியில் உள்ள புண்ணாக்கு கம்பெனி அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த மாரிச்சாமி (20) ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார்.
அந்த ஸ்கூட்டரில், அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்களான முகில்வண்ணன் (22), மாரிமணி (24) ஆகியோர் பின்னால் அமர்ந்து வந்தனர். திடீரென மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதியது. இதில் இரு வாகனங்களிலும் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தில் பலி
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மயில்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரிச்சாமி, முகில்வண்ணன், மாரிமணி ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அதில் மாரிச்சாமி, முகில்வண்ணன் ஆகிய இருவரின் வலது கால் முறிந்தது.
படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மயில்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் புகார் செய்தார். அதன்பேரில் மாரிச்சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.