காரிமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


காரிமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

காரிமங்கலம்:

கல்லூரி மாணவர்

தர்மபுரி நகர் நியூ காலனியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் தினேஷ் (வயது 20). இவர் தர்மபுரி அரசு கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது நண்பர்களான சஞ்சய், கலையரசு, நித்திஷ் மற்றும் பந்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த சக்தி ஆகியோருடன் முள்ளனூர் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வரும் நிலையில் தினேஷ் நீச்சல் தெரியாததால் ஏரிக்கரையோரத்தில் நின்று குளித்து கொண்டிருந்தார்.

பலி

அப்போது திடீரென தண்ணீரில் கால் வழுக்கி ஆழமான பகுதிக்கு சென்று எதிர்பாராதவிதமாக மூழ்கினார். உடனே அவரது நண்பர்கள் நீந்திச்சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் தினேஷ் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பலியானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் தினேசின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்த பரிதாப சம்பவம் தர்மபுரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story