சிறுத்தை தாக்கி கல்லூரி மாணவி படுகாயம்
கூடலூரில் சிறுத்தை தாக்கி கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.
கூடலூர்
கூடலூரில் சிறுத்தை தாக்கி கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.
சிறுத்தை
கூடலூர் மார்தோமா நகரில் இருந்து புத்தூர் வயல் செல்லும் சாலையில் கடந்த 10 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த வழியாக கடந்த 25-ந் தேதி மாலை 6 மணிக்கு சன்னி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது சிறுத்தை தாக்க முயன்றது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதே நாளில் தனது மனைவியுடன் சென்ற பள்ளிக்கூட ஆசிரியர் காலித் என்பரை சிறுத்தை தாக்கியது. இதில் அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வனத்துறையினர் மாலை 6 மணி முதல் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
கல்லூரி மாணவி படுகாயம்
இந்த நிலையில் புத்தூர்வயலைச் சேர்ந்த ராஜு மகள் சுசீலா (வயது 18). இவர் கூடலூர் அரசு கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் அவர் மாலை நேரத்தில் கூடலூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு பணி முடிந்து ஸ்கூட்டரில் தனது வீட்டுக்கு சுசிலா சென்று கொண்டிருந்தார். அப்போது மார்தோமா நகர் - புத்தூர் வயல் சாலையில் சென்ற போது அப்பகுதியில் மறைந்திருந்த சிறுத்தை சுசீலாவை திடீரென தாக்கியது.
இதில் சுசீலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த வழியாக வந்த அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சுசிலா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், வனச்சரகர் ராஜேந்திரன், ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று மாணவி சுசிலாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து சிறுத்தை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து புத்தூர் வயல் சாலையில் பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை அச்சாலையில் நடந்து செல்லுதல் மற்றும் வாகனங்களை இயக்குதலை தவிர்க்கும்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.