கல்லூரி மாணவர் விபத்தில் பலி
சின்னாளப்பட்டி அருகே, கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார்.
கல்லூரி மாணவர்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை அடுத்த பெருமாள்கோவில்பட்டி அருகே உள்ள ரங்கசாமிபுரத்தை சேர்ந்தவர் காளியப்பன். அவருடைய மனைவி குருவம்மாள். இந்த தம்பதியின் மகன்கள் மோகன்குமார், பிரசாந்த் (வயது 21).
இதில் பிரசாந்த், திண்டுக்கல் அருகே தோமையார்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. (ஐ.டி.) 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் நேற்று நடந்த செய்முறை தேர்வில் பிரசாந்த் பங்கேற்றார். தேர்வு முடிந்ததும் மதியம் 1 மணி அளவில் சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை, காமலாபுரம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டனர்.
பிரசாந்த் தன்னுடைய மோட்டார் சைக்கிளை தனது நண்பரிடம் கொடுத்துவிட்டு, நண்பரின் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். ஒன்றன் பின் ஒன்றாக மோட்டார் சைக்கிள்களில் மாணவர்கள் சென்றனர்.
பரிதாப சாவு
திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், சின்னாளப்பட்டி அருகே போக்குவரத்து நகரில் மோட்டார் சைக்கிளில் பிரசாந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால் டிப்பர் லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை, முந்தி செல்ல பிரசாந்த் முயன்றார்.
அப்போது நான்கு வழிச்சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரசாந்த், லாரியின் பக்கவாட்டு பகுதியில் மோதினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கண்ணீர் விட்டு கதறல்
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பிரசாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது கண் எதிரே, பிரசாந்த் உயிரிழந்ததை கண்ட சக மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இதேபோல் பிரசாந்தின் தந்தை காளியப்பன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையை தொடர்ந்து மகனும் விபத்தில் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.