விக்கிரவாண்டி அருகே பயங்கரம்கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை3 ஆண்டு காதலை முறித்துக் கொண்டதால் காதலன் வெறிச்செயல்
விக்கிரவாண்டி அருகே 3 ஆண்டு காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன், நர்சிங் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.
விக்கிரவாண்டி,
காதல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் காலனியை சேர்ந்தவர் சுதன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்லியம்மாள். இவர் விழுப்புரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியரின் மகள் தரணி(வயது 18). இவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், மதுரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மகன் கணேஷ்ராஜ் (23) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். செல்போனிலும் அடிக்கடி பேசி வந்தனர்.
பெற்றோர் எதிர்ப்பு
இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் தரணியின் பெற்றோருக்கு தெரிந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காதலை கைவிடுமாறு தங்களது மகளை கண்டித்துள்ளனர். இதனால் தரணி, கணேஷ்ராஜியுடன் பழகுவதை தவிர்த்தார். இருப்பினும் கணேஷ்ராஜ், தரணியிடம் பலமுறை பேச முயன்றார். ஆனால் தரணி அவரை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
கழுத்தை அறுத்து கொலை
இந்த நிலையில் கணேஷ்ராஜ் நேற்று அதிகாலை தரணியின் வீட்டுக்கு சென்றார். அப்போது தரணி வீட்டின் வெளியே உள்ள குளியலறையில் இருந்து நடந்து வந்தார். இதைபார்த்த கணேஷ்ராஜ், தரணியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறும், பேசுமாறும் வற்புறுத்தியுள்ளார். அதற்கு தரணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தரணியின் கழுத்தை அறுத்தும், வெட்டி விட்டும், அங்கிருந்து தப்பினார். இதில் தரணி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
காதலன் கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருக்கனூர் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கி இருந்த கணேஷ்ராஜை கைது செய்தனர்.
பரபரப்பு
அப்போது அவர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து விட்டு, தன்னை புறக்கணித்ததால் ஆத்திரமடைந்து தரணியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான கணேஷ்ராஜ் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் தங்கி, அங்குள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.