கல்லூரி மாணவர் பிணத்தை வாங்க மறுத்து 4-வது நாளாக உறவினர்கள் போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பிறகு பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு
பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு
சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி பலியான கல்லூரி மாணவர் பிணத்தை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
உறவினர்கள் போராட்டம்
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ஹரிசங்கர் (வயது 17). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி கந்தசாமிபாளையத்தில் லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்ற ஹரிசங்கர் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஹரிசங்கர் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவருடைய உடலை வாங்க மாட்டோம் என ஹரிசங்கரின் உறவினர்கள் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கந்தசாமிபாளையத்தில் ஹரிசங்கரின் உறவினர்கள் மற்றும் அதிகாரிகள், போலீசார் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. மேலும் கந்தசாமிபாளையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று 4-வது நாளாக ஹரிசங்கரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், தாசில்தார் மாசிலாமணி, கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த், கொல்லன் கோவில் பேரூராட்சி செயல் அலுவலர் காந்தரூபன் ஆகியோர் முன்னிலையில் கந்தசாமிபாளையத்தில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகே 2-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஹரிசங்கரின் பெற்றோர்கள் மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன், ஆதிதமிழர் பேரவையை சேர்ந்த வீரகோபால், பெருமாவளவன், பழனிச்சாமி உள்பட உறவினர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்
அப்போது ஹரிசங்கரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கைகள் வருமாறு:-
இறந்த ஹரிசங்கரின் தந்தை ரவி கொல்லன் கோவில் பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக உள்ளார். அவரை நிரந்தர பணியாளராக ஆக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட இளம் வயது குழந்தைகளை பலர் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். இப்படி ஈடுபடுத்தினால் குழந்தை நல சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடல் ஒப்படைப்பு
கந்தசாமிபாளையத்தில் பாதுகாப்பு கருதி அடுத்த 15 நாட்களுக்கு இப்பகுதியில் இரவு பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டு்ம். ஹரிசங்கரின் பெற்றோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதின் பேரில் பெற்றோர்கள் ஹரிசங்கரின் உடலை பெற்றுக் கொள்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஹரிசங்கரின் உடலை உறவினர்கள் நேற்று இரவு பெற்றுக்கொண்டனர். அதன்பின்னர் கந்தசாமிபாளையம் கொண்டு செல்லப்பட்டு் மாணவர் உடல் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. கலந்து கொண்டார்.