அரசு பஸ்சை சிறைப்பிடித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்


அரசு பஸ்சை சிறைப்பிடித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை சிறைப்பிடித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை சிறைப்பிடித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ் சிறைபிடித்து போராட்டம்

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் திருவண்ணாமலை மட்டுமின்றி கலசபாக்கம், போளூர், செங்கம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்து படிக்கின்றனர்.

இந்த நிலையில் கல்லூரியில் வகுப்புகளை முடித்து விட்டு வில்வாரணி பகுதியை சேர்ந்த மாணவர்கள் வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று மதியம் சுமார் 1 மணியளவில் வந்தனர்.

வழக்கமாக பஸ் நிலையத்தில் இருந்து வில்வாரணிக்கு மதியம் 1 மணிக்கு ஒரு பஸ்சும், 2 மணிக்கு ஒரு பஸ்சும் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இன்று மதியம் 1 மணியளவில் வில்வாரணிக்கு செல்ல வேண்டிய பஸ் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி இயக்கப்பட்டு உள்ளது.

இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள் 2 மணிக்கு புறப்படும் பஸ்சில் ஏறியுள்ளனர். அந்த பஸ் 3 மணி வரை இயக்கப்படாமல் பஸ் நிலையத்திலேயே நின்று உள்ளது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பஸ் நிலையத்திலேயே காத்திருந்த மாணவ, மாணவிகள் திடீரென ஆவேசம் அடைந்து பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில் திரண்டு காஞ்சீபுரம் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 முறை மனு அளித்தும்...

இதனால் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல புறப்பட்ட அனைத்து பஸ்களும் வரிசையாக அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் கூறுகையில், மதிய வேளையில் பஸ் நிலையத்தில் இருந்து வில்வாரணி பகுதிக்கு சாிவர பஸ்கள் இயக்கப்படுவதில்லை.

கலெக்டர் அலுவலகத்தில் 7 முறை மனு அளித்தும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே வில்வாரணி பகுதிக்கு முறையாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் போக்குவரத்து துறை சார்பில் உடனடியாக வில்வாரணிக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மாணவ, மாணவிகள் ஏறி சென்றனர்.

இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story