ரெயில் நிலையத்தில் ரகளை தட்டிக்கேட்ட ரெயில்வே போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்
பொன்னேரி ரெயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட ரெயில்வே போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உலக நாதன் நாராயணசாமி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இதன் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்க கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அந்த கல்லூரியின் மாணவர்கள் மின்சார ரெயிலில் பொன்னேரி நோக்கி சென்றனர்.
அப்போது அவர்கள், 'கும்மிடிப்பூண்டி ரூட், அடக்்கி ஆண்ட கூட்டம், அடங்கி போக மாட்டோம்' என்பது உள்பட பல்வேறு பேனர்களை வைத்து கொண்டு ஓடும் ரெயிலில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட கும்மிடிப்பூண்டி ரெயில்வே போலீசார், பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என கல்லூரி மாணவர்களை எச்சரித்து ரெயிலில் அனுப்பி வைத்தனர்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
பின்னர் பொன்னேரி ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய மாணவர்கள், அங்கு பட்டாசு வெடித்தும், பேண்டு வாத்தியங்கள் அடித்து நடனமாடியும், ரெயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட பொன்னேரி ரெயில்வே போலீசார் ஒருவரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் கும்மிடிப்பூண்டி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக கல்லூரி மாணவர்களான ரஞ்சித், ஜார்ஜ், சஞ்சய், மற்றொரு ரஞ்சித், அஜீத், மகேஷ், சூர்யா ஆகிய 7 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.