கல்லூரி மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை


கல்லூரி மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 3 Jun 2023 2:00 AM IST (Updated: 3 Jun 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே தற்கொலை செய்த நிலையில் போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்த கல்லூரி மாணவி உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்கொலை வழக்கை மர்ம சாவாக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே தற்கொலை செய்த நிலையில் போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்த கல்லூரி மாணவி உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்கொலை வழக்கை மர்ம சாவாக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாணவி தற்கொலை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இடுஹட்டி தொட்டண்ணி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் பிரியதர்ஷினி வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து உள்ளார்.

இதற்கிடையே கடந்த 30-ந் தேதி பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து மாணவியின் உடல் அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

உடல் தோண்டி எடுப்பு

இந்தநிலையில் பிரியதர்ஷினியின் செல்போனை பெற்றோர் பார்த்தனர். அப்போது அந்த மாணவி அதே பகுதியை சேர்ந்த வாலிபரிடம் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது. இதனால் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது. இதுகுறித்து பெற்றோர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதற்கிடையே பிரியதர்ஷினி தற்கொலை செய்த பின்னர், போலீசுக்கு தெரியாமல் உடல் அடக்கம் செய்யப்பட்டது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அஜய்கான் கோத்தகிரி போலீசில் புகார் அளித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி உத்தரவின் பேரில் தாசில்தார் ராஜசேகர், கிராம நிர்வாக அலுவலர் அஜய்கான் மற்றும் கோத்தகிரி போலீசார் முன்னிலையில் நேற்று கல்லூரி மாணவியின் உடல் சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அந்த பகுதியிலேயே மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் மீண்டும் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி உடல் தோண்டி எடுக்கப்பட்ட போது, அந்த பகுதியில் கிராம மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story