கானா பாட்டு, கேலி கிண்டல் என மாநகர பஸ்களில் பெண்களை அச்சுறுத்தும் கல்லூரி மாணவர்கள்
பூந்தமல்லி, குன்றத்தூர் பகுதிகளில் இருந்து பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பஸ்சில் கல்லூரி மாணவர்களின் அத்துமீறும் செயல்களால் பெண்கள், முதியோர் வேதனைப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
சென்னை,
பூந்தமல்லி, குன்றத்தூர், பட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து பிராட்வே செல்ல போக்குவரத்து துறை மூலம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் (53இ, 53பி, 53) ஆகிய பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் காலை வேளையில் அதாவது (8.30 - 10.30) நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதும்.
மேற்கூறிய பஸ்களில் பெண்கள், ஆண்கள் கூட்டத்தைவிட கல்லூரி மாணவர்களின் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது.
கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்
சென்னைக்கு வரும் கல்லூரி மாணவர்கள் குன்றத்தூர், குமணன்சாவடி, வேலப்பன் சாவடி, வானகரம் ஆகிய பகுதிகளில் இருந்து பஸ்களில் ஏறிக்கொள்கிறார்கள். பஸ்சின் முன் படிக்கட்டுகளிலும் பின் படிக்கட்டுகளிலும் மாணவர்கள் கூட்டம் சேர்ந்ததும் அவர்களின் அரங்கேற்றம் ஆரம்பமாகிறது.
முதலில் கானா பாடல், பின்பு தாளம், அதன் பின்னர் கூச்சல் கடைசியில் இரைச்சல். அவர்கள் போடும் இரைச்சலில் பஸ்சில் யாரேனும் இதய நோயாளி இருந்தால் பஸ் பிராட்வே செல்வதற்கு பதில் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிடுமோ என்று பயணிகள் நினைக்கும் வண்ணம் மாணவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
ஆயுதங்கள்
அவர்களை யாரும், எதுவும் கேட்க தயங்குகிறார்கள், காரணம் பயம். நேற்று கூட 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாணவர்களை பார்த்து 'ஏனப்பா? கூச்சல் போடுகிறீர்கள்' என கேட்டதுக்கு அந்த பெண்மணியை ஆபாசமாக வசை பாடியது பஸ் பயணிகள் அனைவரையும் வேதனைப்பட வைத்தது. மேலும் அந்த மாணவர்கள் அனைவரும் முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பதால் கண்டக்டர், டிரைவர்கள் கூட அவர்களை தட்டி கேட்கவோ, புகார் கொடுக்கவோ அச்சப்படுகிறார்கள்.
குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் சில பெண்கள் இவர்களின் இம்சைகளை தாங்க முடியாமல் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என ஆட்டோவில் பயணம் செய்து வருகிறார்கள்.
மாறுவேடத்தில் போலீசார்
ஆசிரியர்கள் கண்டிக்காத பிள்ளை போலீசில் அடி வாங்குவான் என்பது பழைய கூற்று. போலீஸ் தண்டிக்காத மாணவர்கள் கொலைகாரர்களாகவும், கொள்ளைக்காரர்களாவும் மாறுவார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இந்த வழித்தடம் மட்டுமல்லாது சென்னையின் முக்கிய பல வழித்தடங்களில் செல்லும் பஸ்களிலும் பயணிகள் இதுபோல் படும் இன்னல்கள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக இனிவரும் நாட்களில் ஒவ்வொரு மாநகர பஸ்களிலும் போலீசார் மாறுவேடத்தில் சென்று பஸ்களில் எல்லை மீறுபவர்களை பிடித்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும்.
பயணிகள் ஒவ்வொருவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள், இதற்கிடையில் புது பிரச்சினையாக மாணவர்களின் கேலி, கிண்டல் உருவெடுத்திருப்பதால் அவை பயணிகளின் நிம்மதியை முழுவதுமாக சிதைத்து விடுகிறது.