கல்லூரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி குத்தாலம் அரசு கல்லூரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர கோரியும் சாலை மறியல் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 மாணவர்கள் வருகிற 20-ந் தேதி வரை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்பு போராட்டம்
இதனிடையே மாணவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் 13-ந் தேதிக்குள் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், மாற்று ஏற்பாடு செய்யப்படாததால் கல்லூரியின் முன்பு மாணவர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.