விசைப்படகு மீது மோதியஹாங்காங் கப்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நடுக்கடலில் மீனவர்கள் விசைப்படகு மீது மோதிய ஹாங்காங் கப்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
நடுக்கடலில் மீனவர்கள் விசைப்படகு மீது மோதிய ஹாங்காங் கப்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அப்போது தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் மற்றும் மீனவர்கள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்தூரை சேர்ந்த அந்தோணி தாசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் 27-ந் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஹாங்காங் நாட்டில் பதிவு செய்த டேங்கர் கப்பலானது விசைப்படகு மீது மோதியது. இந்த விபத்தில் மீனவர்கள் 9 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தை ஏற்படுத்திய கப்பல் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் விபத்து குறித்து இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்காமல் துபாய் நாட்டுக்கு சென்று விட்டது. எனவே விபத்தை ஏற்படுத்திய கப்பல் மீதும், கப்பல் மாலுமி மீதும், கப்பல் உரிமையாளர் மீதும் குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீட்டு மனை பட்டா
அருமநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் கூட்டாக அளித்த மனுவில், 'நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் வில்லுக்குறி சடையப்பர் கோவில் தெருவை சேர்ந்த ராமசந்திரன் மற்றும் பலர் கூட்டாக அளித்த மனுவில், 'எங்கள் ஊரில் உள்ள காட்டுகுளத்து நீரை பயன்படுத்தி சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது.
விளை நிலங்களை மீட்க வேண்டும்
இந்த குளத்துக்கான தண்ணீர் இரட்டைக்கரை கால்வாய் வில்லுக்குறி பாலம் 2-வது மடையில் இருந்து ஓடை வழியாக விவசாய நிலம் மற்றும் அரசு நிலத்தில் வந்து பின்னர் குளத்துக்கு வருகிறது.
இந்த நிலையில் 3 ஏக்கர் விவசாய விளை நிலத்தை ஒரு நிறுவனம் வாங்கி அரசு அனுமதி இல்லாமல் வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்துள்ளது. இதனால் காட்டுக்குளத்துக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. எனவே வீட்டுமனையாக மாற்றப்பட்ட விளை நிலங்களை மீட்டு மீண்டும் விவசாய நிலமாக மாற்ற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.