மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி
வேட்டவலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த சின்ன ஓலைப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 59), தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (45). இவர்களது பேரன் தயாநிதி. இந்த நிலையில் ரேவதிக்கும், தயாநிதிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை ஏழுமலை மோட்டார் சைக்கிளில் ஆவூர் கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
பின்னர் சிகிச்சை முடிந்து சின்ன ஓலைப்பாடி கிராமத்திற்கு திரும்பினர். சின்ன ஓலைப்பாடி கூட்ரோடு வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ஏழுமலை ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஏழுமலை, ரேவதி, தயாநிதி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.