மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வியாபாரி பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வியாபாரி உயிரிழந்தார்.
துறையூர்:
திருச்சி மாவட்டம், துறையூர் கங்காரு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 32). வியாபாரியான இவர் சொந்தமாக கடலை மிட்டாய் தயாரிக்கும் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆலைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பெரியகடை வீதியில் வந்தபோது, எதிரே துறையூர் பகுதியை சேர்ந்த குகன்(19), கிரி(19) மற்றும் கார்த்திக்(23) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை விக்னேஷ் இறந்தார். இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்தில் சிக்கிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து ஜெயந்தி கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.