மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பரிதாப சாவு
ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழிலாளி
ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் தெரு பி.எஸ். ராஜாநகரில் வசிப்பவர் கணபதி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 26).
இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இவர் வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இவர் பெட்ரோல் பங்க்கில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்நர் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரியில் இருந்து ரெயில்வே கேட்டை தாண்டி காயல்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, இவருக்கு முன்னால் அம்மன்புரம் குளத்தாங்கரை தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் பெருமாள் (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவர் திடீரென்று மோட்டார் சைக்கிளை வலதுபுறமாக திருப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் சென்று கொண்டிருந்த ராஜ்குமார் மோட்டார் சைக்கிள், அவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். பெருமாள் லேசான காயத்துடன் தப்பினார்.
மருத்துவமனையில் சாவு
அக்கம் பக்கத்தினர் ராஜ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும், ராஜ்குமார் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.