மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கிராம நிர்வாக உதவியாளர் பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் கிராம நிர்வாக உதவியாளர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கீழாநிலை பாப்பாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). இவர், காரமங்கலம் வட்டத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தேத்தம்பட்டியில் இருந்து பாப்பாம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கும்மங்குடி அருகே வந்த போது அரிமளம் பாண்டியன் தெருவை சேர்ந்த செல்லையா என்கிற குமார் (41) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், கிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
கிராம நிர்வாக உதவியாளர் பலி
இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.