தாறுமாறாக ஓடிய கார் தள்ளுவண்டி மீது மோதல்; 7 பேர் படுகாயம்


தாறுமாறாக ஓடிய கார் தள்ளுவண்டி மீது மோதல்; 7 பேர் படுகாயம்
x

திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய கார் தள்ளுவண்டி மீது மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய கார் தள்ளுவண்டி மீது மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாறுமாறாக ஓடிய கார்

குலசேகரத்தை அடுத்த வலியாற்று முகத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). இவருடைய மனைவி சித்ரா (32). மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு ஒரே மகன் உள்ளார். புலியிறங்கியில் உள்ள ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்த வீட்டின் முன்பு தள்ளுவண்டியில் கூழ், மோர் மற்றும் பலகாரம் வைத்து அவர்கள் வியாபாரம் செய்து வந்தனர். இதனை நம்பி தான் அவர்களுடைய குடும்பம் இருந்தது.

இந்தநிலையில் நேற்று மதியம் பிரகாஷ் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தள்ளுவண்டியின் முன்புறம் காஞ்சிரகோடு ரெனால்டு ஜெபா என்பவர் கூழ் குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் அதிவேகமாக வந்தது. இதில் கார் டிரைவர் திடீரென டிரைவருடைய கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

7 பேர் படுகாயம்

அந்த சமயத்தில் கார் கூழ் குடித்துக் கொண்டிருந்த ரெனால்டு ஜெபா, பிரகாஷ் மற்றும் தள்ளுவண்டி மீது மோதியபடி சென்று வீட்டை ஒட்டிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரகாஷ், ரெனால்டு ஜெபா மற்றும் காரில் வந்தவர்கள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் தள்ளுவண்டியும், காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.

உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம், மார்த்தாண்டம், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த அஜித்குமாருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று அவர் திற்பரப்பு அருவிக்கு காரில் சென்று விட்டு குளச்சல் அரவிந்த் (17), கொல்வேல் விக்னேஷ் (27), விஜூ (23), வினீத் (25) ஆகியோருடன் திரும்பி வந்த போது தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story