சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் தரைகளில் வண்ணமயமான கோலங்கள் வரைந்து அசத்தல்
சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் உள்ளே தரைகளில் வண்ணமயமான கோலங்கள் வரையப்பட்டு வருகிறது.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2,400 கோடியில் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களை இணைத்து ஒருங்கிணைந்த அதிநவீன புதிய விமான முனையங்கள் கட்டும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2.36 லட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்படும் இந்த புதிய முனையங்கள் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய அதிநவீன முனையத்தில் பயணிகள் ஓய்வறைகள், வி.வி.ஐ.பி.க்கள் தங்கும் அறைகள், ஷாப்பிங் மால்கள் உள்பட பல்வேறு கூடுதல் வசதிகள் உள்ளன. சென்னை விமான நிலையத்தில் முதல் முதலாக, முனையத்துக்குள் அதிகளவு சூரிய ஒளி வெளிச்சம் வருவதற்காக 'ஸ்கை லைட் சிஸ்டம்' எனும் பிரத்யேக வடிவமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தரைகளில் கோலங்கள்
தற்போது சுமாா் 95 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. விமான நிலைய புதிய முனையத்தின் உள்புற சுவர்கள் மற்றும் தரைகளில் தமிழக, இந்திய கலாசாரத்தை பறைசாட்டும் வகையில் ஓவியங்கள், ேகாலங்கள் வரையப்பட்டு வருகின்றன.
பரத நாட்டியம், விதவிதமான வண்ணமயமான கோலங்கள் என தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களின் கலாசார ஓவியங்களும் வரையப்பட்டு உள்ளன. விமான நிலையம் முழுவதும் ஓவியங்களும், தரைகளில் கோலங்களும் வரையப்பட்டு உள்ளதால் பயணிகளை வெகுவாக கவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.