ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா- ஊட்டியில் 2-ந்தேதி நடக்கிறது
ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா ஊட்டியில் 2-ந்தேதி நடக்கிறது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் விரைவு மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட கோர்ட்டு கட்டிடங்கள் உள்ளன. மேலும் ஒரு சில நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் பழங்கால கட்டிடத்தில் இயங்கி வருவதாலும், போதுமான இடம் இல்லாததாலும், நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குவதை நிறுத்தும் வகையிலும் ஊட்டி பிங்கர்போஸ்ட் அடுத்த காக்கா தோப்பு பகுதியில் ரூ.33 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
கடந்த சில வருடங்களாக நடந்துவந்த கட்டுமான பணிகள் முடிவுற்று உள்ளன. இதன் திறப்பு விழா 2-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். இதையொட்டி திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.