தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு
பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி பரமக்குடியில் அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியபின், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:-
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு பஸ்கள்
எந்த பகுதியிலும் சிறிய பிரச்சினை கூட வராமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரின் அறிவுரைப்படி அனுமதி பெற்ற சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.
டாஸ்மாக் கடைகள் செயல்படாது
மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1500 போலீசாருடன் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 3500 போலீசார் வரவழைக்கப்பட்டு மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நினைவு தின நிகழ்ச்சி அனைவரின் ஒத்துழைப்புடன் எவ்வித இடையூறும் இன்றி அமைதியாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பரமக்குடி ஆர்.டி.ஓ. முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் மன்சூர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.