தேசத்துக்கு எதிராக கருத்து வெளியிடும் சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்


தேசத்துக்கு எதிராக கருத்து வெளியிடும்   சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்
x

“தேசத்துக்கு எதிராக கருத்து வெளியிடும் யுடியூப் சேனல்கள், சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும்” என்று தூத்துக்குடியில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

தூத்துக்குடி

"தேசத்துக்கு எதிராக கருத்து வெளியிடும் யுடியூப் சேனல்கள், சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும்" என்று தூத்துக்குடியில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

பேட்டி

நெல்லையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இங்கு அவருக்கு பா.ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் கண்டறிந்து போற்றி வருகிறோம். நம் நாடு 100-வது சுதந்திர தினத்தில் போற்றப்படக்கூடிய நாடாக, வளர்ச்சி அடைந்த நாடாக, பெருமைமிக்க நாடாக, அனைத்தும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

ஒண்டிவீரன் தபால் தலை

நாளை (அதாவது இன்று) ஒண்டிவீரன் 251-வது நினைவு தினத்தை போற்றும் விதமாகவும், அவருடைய எண்ணம், செயலை பாராட்டியும், அவருடைய செயலை அங்கீகரிக்கும் விதமாகவும் மத்திய அரசின் சார்பில் நெல்லையில் தபால் தலை வெளியிடப்படுகிறது.

இந்த தபால் தலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக் கொள்கிறார். மேலும் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த 10 நாள் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

சமூக ஊடகங்களுக்கு தடை

நம் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் உள்ளது. அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக, இந்திய ராணுவத்துக்கு எதிராக, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக ஏதாவது நிறுவனம் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக 100-க்கும் மேற்பட்ட யுடியூப் சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளன. நேற்று 8 சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சில சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து தேசத்திற்கு எதிராக கருத்துகளை வெளியிடும் எந்த யுடியூப் சேனலாக இருந்தாலும், எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் அவை தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story