வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.116.50 குறைப்பு
வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.116.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
சென்னை,
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகிறது. அதனடிப்படையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருவதால் வணிகர்களும், வீட்டு உபயோக சிலிண்டர் உயர்த்தும் போது இல்லத்தரசிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வணிக சிலிண்டர் கட்டணம் குறைப்பு
இதேபோல தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையும் தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவம்பர் மாதத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.
அதன்படி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் கட்டணம் ரூ.116.50 குறைக்கப்பட்டு உள்ளது என்று விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
7-வது முறையாக குறைவு
19 கிலோ எடை கொண்ட வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த மாதம் ரூ.2009.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 116.50 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.1,893-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்துக்கு பிறகு தொடர்ந்து 7-வது முறையாக தற்போது வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
4-வது மாதமாக மாற்றமின்றி
இதேபோல் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து 4 மாதமாக எந்த விதமாற்றமும் செய்யப்படாமல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரஷியா-உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியிருக்கிறது. இதனாலேயே தற்போது பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமின்றி தொடருகிறது என்று எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.