ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரியை மிரட்டிய வணிக வரித்துறை கார் டிரைவர் கைது
சென்னையில் ஜி.எஸ்.டி. அதிகாரி போல நடித்து ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரியை மிரட்டிய வணிக வரித்துறை கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை கொளத்தூர், அய்யப்பா நகரைச் சேர்ந்தவர் நேரு (வயது 48). இவர் விவசாய பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசி மிரட்டி வந்தார். அந்த நபர் தன்னை, ஜி.எஸ்.டி. அதிகாரி என்று கூறிக்கொண்டார்.
நேருவின் நிறுவனம் ரூ.4 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுத்தால், நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியதுதான் என்றும், ஆனால் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் போனில் பேசிய நபர் கூறினார்.
ஆனால் நேருவுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. போனில் பேசிய நபர், உண்மையிலேயே ஜி.எஸ்.டி. அதிகாரியாக இருக்குமா என்று தெரிந்து கொள்ள விரும்பினார். சைதாப்பேட்டை வணிகவரி அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த நபர் நேருவிடம் தெரிவித்தார். ஆனால் சைதாப்பேட்டை வணிகவரி அலுவலகத்திற்கு சென்று, குறிப்பிட்ட நபரிடம் செல்போனில் பேசியபோது, 'வணிகவரி அலுவலகம் அருகில் உள்ள கோவிலுக்கு வாருங்கள்' என்று குறிப்பிட்டார்.
அவர் சொன்ன கோவிலுக்கு சென்று பார்த்தபோது, போனில் பேசிய நபர், வணிகவரி அலுவலகத்தின் காரில் பந்தாவாக உட்கார்ந்து இருந்தார்.
ரூ.10 லட்சம் தந்தால் போதும்...
அவர் நேருவிடம் ரூ.25 லட்சம் கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். அவ்வளவு தொகை என்னிடம் இல்லை என்று நேரு பதில் அளித்தார். ரூ.10 லட்சமாவது கொடுக்க வேண்டும் என்று அந்த நபர் சொன்னார். பின்னர் அந்த நபர் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலை பகுதிக்கு வாருங்கள் என்று கூறி விட்டு காரில் ஏறி சென்று விட்டார். குறிப்பிட்ட நபர் உண்மையான ஜி.எஸ்.டி. அதிகாரி இல்லை என்பதை நேரு புரிந்து கொண்டார்.
கடந்த 25-ந் தேதி வடக்கு உஸ்மான் சாலை பகுதிக்கு நேரு சென்றார். முன்கூட்டியே பாண்டிபஜார் போலீசுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார். பணம் கேட்ட நபரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிடப்பட்டது. பாண்டிபஜார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன் தயார் நிலையில் இருந்தார்.
கைதானார்
ரூ.10 லட்சம் கேட்ட நபர் வந்தவுடன் அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் ஜி.எஸ்.டி. அதிகாரி இல்லை என்று தெரிய வந்தது. அவர் வணிகவரி அலுவலகத்தில் கார் டிரைவராக வேலை செய்பவர் என்றும், அவரது பெயர் வேலு (46) என்றும், தியாகராயநகர் லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கண்டறியப்பட்டது.
அவர் ஜி.எஸ்.டி. அதிகாரி போல நடித்து, வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து, மோசடியில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இதனையடுத்து வேலு கைது செய்யப்பட்டார்.