பதவி உயர்வு பட்டியல்களை உடனே வழங்க வலியுறுத்திவணிகவரி பணியாளர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு பட்டியல்களை உடனே வழங்க வலியுறுத்தி வணிகவரி பணியாளர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து நிலை பதவி உயர்வு பட்டியல்களையும் உடனே வழங்கிட வேண்டும். கோட்ட மாறுதல் கோரியவர்களுக்கு, உடனடியாக மாறுதல் வழங்கிட வேண்டும். சட்டப்பேரவையில் அறிவித்து இரண்டு ஆண்டுகளும், அரசாணை வெளியிட்டு 2½ மாதங்கள் ஆகியும் நிலுவையில் உள்ள துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தினர் நேற்று கடலூர் வணிக வரி அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தெய்வீகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஜனார்த்தனன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட இணை பொருளாளர் சுகன்யா, இணை செயலாளர் அசோகன், செயற்குழு உறுப்பினர்கள் சிந்தாமணி, செந்தில் மற்றும் வணிகவரி பணியாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.