நிலுவை வரியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை- ஆணையர்
நாகை நகராட்சிக்கு ரூ.17.20 கோடி வரி பாக்கி உள்ளது. நிலுவை வரியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகை நகராட்சிக்கு ரூ.17.20 கோடி வரி பாக்கி உள்ளது. நிலுவை வரியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.17.20 கோடி பாக்கி
நாகை நகராட்சிக்கு 2022 -2023-ம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், கடைவாடகை மற்றும் தொழில் உரிமக்கட்டணம் ஆகியவற்றின் நிலுவை மற்றும் நடப்பு தொகை ரூ.17.20 கோடி ஆகும். நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, தெருவிளக்கு, பொது சுகாதார பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வசதியாக நிலுவையில் உள்ள வரிபாக்கி தொகையை உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும். வரி செலுத்தவில்லை என்றால் பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்கள் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படும்.
ஜப்தி நடவடிக்கை
எனவே உடனடியாக வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள், பாதாளசாக்கடை இணைப்புகள் பாரபட்சம் இன்றி துண்டிக்கப்படும். ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் நகராட்சியால் மேற்கொள்ளப்படும். இந்த நகர் மாவட்ட தலைநகரமாக உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் நாள் தோறும் வருகைபுரிகின்றனர். இவ்வாறு வருகைபுரியும் சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி பொதுமக்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியை செய்ய போதிய நிதி ஆதாரம் நகராட்சியில் இல்லை.
30-ந் தேதி கடைசி நாள்
இதனை கருத்தில் கொண்டு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாளசாக்கடை கட்டணம், கடைவாடகை, தொழில் உரிமக்கட்டணம் ஆகியவற்றின் தொகையை வருகிற 30-ந் தேதிக்குள் (புதன்கிழமை) செலுத்த வேண்டும்.
இணையதளம் மூலமாகவும், டெபிட் கார்டு, கிரடிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தியும் வரி செலுத்தலாம். வரி செலுத்த வசதியாக வருகிற 30-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நகராட்சி வரி வசூல் மையம் செயல்படும். பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி தொகையை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.