குறுவை, சம்பா பயிர்களின் நிலை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் நேரில் ஆய்வு
குறுவை, சம்பா பயிர்களின் நிலை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் நேரில் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் குறுவை சம்பா நெற்பயிர்கள் நிலை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் விவசாயிகளை சந்தித்தும் குறைகளை கேட்டறிந்தார்.
குறுவை சாகுபடி நிலை
தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆற்று நீரின் மூலம் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. இந்த நிலையில் சம்பா சாகுபடிக்கான ஆயத்த பயணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆற்றுநீரின் மூலம் சாகுபடி செய்யப்பட்ட குறுவை மற்றும் சம்பா சாகுபடி பயிர்களின் நிலை குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி நேற்று தஞ்சை வந்தார். பின்னர் அவர் தஞ்சை ஒன்றியத்தில் ராமநாதபுரம் கூடுதல் கிராமம் மற்றும் 8-ம் நம்பர் டவுன்கரம்பை ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் நிலங்களில் நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
குறுவை, சம்பா பயிர்கள்
பின்னர் மருங்குளம் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் ஆய்வு செய்த அவர் அங்கு தோட்டக்கலை செடிகளின் இருப்பு மற்றும் அவற்றை பராமரிக்கும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வெட்டிக்காடு கிராமத்தில் நெற்பயிர்களை பார்வையிட்ட அவர், ஓரத்தநாடு வட்டம் பருத்திக்கோட்டை, தென்னமநாடு வடக்கு கிராமத்தில் குறுவை, சம்பா பயிர்களின் நிலை குறித்து நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
ஒரு மாதத்துக்கு தண்ணீர் தேவை
அப்போது, ஆய்வு செய்த ஆணையரிடம் விவசாயிகள் கூறுகையில், குறுவை பயிருக்கு ஒரு மாதத்துக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இப்போது, 5 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படுகிறது. இதுபோல முறை வைத்து விட்டாலும், 6 முறை தண்ணீர் தேவை. அவ்வாறு விட்டால்தான் பயிரைக் காப்பாற்ற முடியும். மாற்று ஏற்பாடாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு கொடுத்தால், ஆழ்குழாய் மோட்டார் பம்ப்செட் வைத்துள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், அருகிலுள்ள ஆற்றுப்பாசன விவசாயிகளுக்கும் தண்ணீர் கொடுக்க வாய்ப்பாக அமையும், என்றனர்.
இதற்கு ஆணையர் பதிலளிக்கையில், இது குறித்து தமிழக முதல்-அமைச்சரிடம் இன்று (வியாழக்கிழமை) தெரிவிப்பதாகக் கூறினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் தீபக்ஜேக்கப், வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதி தங்கம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா. துணை இயக்குனர்கள் சுஜாதா, பாலசரஸ்வதி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் (பொ) வெங்கட்ராமன். உதவி இயக்குனர்கள் அய்யம்பெருமாள், கணேசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்