மது அருந்திய வாகன ஓட்டிகளை பிடிக்க நவீன கருவி - போலீசாருக்கு கமிஷனர் செந்தில்குமார் வழங்கினார்
மது அருந்திய வாகன ஓட்டிகளை பிடிக்க நவீன டிஜிட்டல் ப்ரீத் அனலைசர் கருவிகளை போலீசாருக்கு கமிஷனர் செந்தில்குமார் வழங்கினார்.
மது அருந்திய வாகன ஓட்டிகளை பிடிக்க நவீன டிஜிட்டல் ப்ரீத் அனலைசர் கருவிகளை போலீசாருக்கு கமிஷனர் செந்தில்குமார் வழங்கினார்.
விபத்தை தடுக்க...
மதுரை நகரில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகர போக்குவரத்து போலீசாருக்கு தேவையான செலவீனங்களுக்காக ரூ.1 கோடியே 2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் வாகன விபத்திற்கு அதிக காரணமான குடிபோதையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளை தடுக்கவும், அதனால் ஏற்படும் விபத்தை தடுக்கவும் நவீன முறையில் தயாரிக்கப்பட்ட 50 டிஜிட்டல் ப்ரீத் அனலைசர் கருவிகள் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பணியில் இருக்கும் போலீசார் அடையாளம் காணும் வகையில் ஒளிரும் மேற்சட்டை, ஒளிரும் கையுறை, ஒளிரும் விளக்குடன் கூடிய கைவிளக்குகள், பிளாஸ்டிக் தடுப்புகள் போன்றவை வாங்கப்பட்டுள்ளது. இந்த உபகரணங்களை போலீசாருக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. அதில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வழங்கினார்.
நவீன டிஜிட்டல் ப்ரீத் அனலைசர்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை போக்குவரத்து போலீசாருக்காக ரூ.30 லட்சம் மதிப்பில் இந்த உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தற்போது வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் ப்ரீத் அனலைசரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் போது ஆக்டிவ் மோட், பாசிட்டிவ் மோட் என 2 வகைகளில் சோதனை நடத்தப்படும். மேலும் சோதனைக்கு ஒத்துழைக்காத வாகன ஓட்டிகளிடம் பாசிட்டிவ் மோட் மூலமாக வாகன ஓட்டியின் வாயின் அருகில் கொண்டு சென்றாலே மது அருந்தியுள்ளாரா என்பது குறித்து அறிந்துகொள்ள முடியும்.
மேலும் ஆக்டிவ் மோட் மூலமாக ப்ரீத் அனலைசரில் ஊதும் போது வாகன ஓட்டியின் முகத்தை புகைப்படம் எடுப்பதோடு, வாகன பதிவு விவரங்கள் மற்றும் இடம் போன்ற முழு விவரங்களுடன் அபராத ரசீது கிடைக்கும். அதனை கோர்ட்டில் சமர்ப்பித்து நடவடிக்கைகளுக்கு உட்படுத்தலாம். இதற்காக கோர்ட்டிலும் அனுமதி பெற்று விட்டோம்.
1 லட்சம் பதிவு
மேலும் ப்ரீத் அனலைசரில் இருந்து அபராத ரசீதை வாகனத்தின் அடிப்படையில் மீண்டும் கணினி மூலமாக திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஒரு ப்ரீத் அனலைசர் எந்திரத்தில் 1 லட்சம் பதிவுகளை பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த புதிய வகை ப்ரீத் அனலைசர் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், ஆறுமுகச்சாமி, சீனிவாசபெருமாள், கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார், உதவி கமிஷனர்கள் வேல்முருகன், லெனின், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.