நகராட்சி கூட்டத்தில் இருந்து ஆணையாளர் வெளிநடப்பு
பட்டா இல்லாத நிலத்தில் வீடு கட்ட தடையில்லா சான்றிதழ் கேட்டதால், நகராட்சி கூட்டத்தில் இருந்து ஆணையாளர் வெளிநடப்பு செய்தார். இதனால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்
பட்டா இல்லாத நிலத்தில் வீடு கட்ட தடையில்லா சான்றிதழ் கேட்டதால், நகராட்சி கூட்டத்தில் இருந்து ஆணையாளர் வெளிநடப்பு செய்தார். இதனால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம், நேற்று மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரீன் மற்றும் துணைத்தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும், ஒவ்வொரு கவுன்சிலராக தங்களது வார்டு பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசி வந்தனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர், பட்டா இல்லாத நிலங்களில் வீடு கட்ட நகராட்சி நிர்வாகம் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதற்கு நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மறுப்பு தெரிவித்தார்.
வெளிநடப்பு
மேலும் அவர் கூறுகையில், பட்டா இல்லாத நிலங்களில் உள்ள வீடுகளுக்கு சட்டத்தில் இடம் இல்லை. இதனால் தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் ஆட்சேபணை தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அவரை, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்து விட்டனர்.
சட்டப்படி செயல்படுகிறேன்
பின்னர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளது. ஏற்கனவே விதிகளை மீறிய கட்டிடங்கள் குறித்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே பட்டா இல்லாத நிலங்களில் வீடு கட்ட தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது. ஆனால் தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் மாதந்தோறும் கூட்டம் நடக்கும்போதெல்லாம் இதே கோரிக்கையை முன்வைக்கின்றனர். நான் சட்டப்படி செயல்பட்டு வருகிறேன் என்றார்.