கழிவுநீரேற்று நிலையங்களில் கமிஷனர் ஆய்வு
கழிவுநீரேற்று நிலையங்களில் இரவு நேரத்தில் கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
மதுரை,
கழிவுநீரேற்று நிலையங்களில் இரவு நேரத்தில் கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
வணிக வளாகம்
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1000 கோடிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பெரியார் பஸ் நிலையம், சுற்றுலா தகவல் மையம், ஜான்சிராணி பூங்கா, குன்னத்தூர் சத்திரம் ஆகியவற்றின் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பெரியார் பஸ் நிலையம் அருகில் ரூ.119.56 கோடி செலவில் வணிக வளாகம், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ரூ.44.20 கோடி செலவில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதில் பெரியார் பஸ் நிலைய பணிகள் மற்றும் சுற்றுலா தகவல் மையம் ஆகியவற்றை மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கமிஷனர், குறிப்பிட்ட காலத்தில் பணியினை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இரவு நேரங்களில்...
அதனைத்தொடர்ந்து கமிஷனர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஜான்சிராணி பூங்கா வணிக வளாகம் மையம், குன்னத்தூர் சத்திரம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். முன்னதாக 4-ந் தேதி இரவு கமிஷனர் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கர்டர் பாலம் பகுதியில் உள்ள கழிவுநீரேற்று நிலையம், மேலப் பொன்னகரம் 8-வது தெரு பகுதியில் உள்ள உந்து கழிவுநீரேற்று நிலையம் மற்றும் பொன்மேனி பகுதியில் உள்ள உபகழிவுநீரேற்று நிலையம் ஆகிய கழிவுநீரேற்று நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நகர் பொறியாளர் லட்சுமணன், மக்கள்தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் ஆறுமுகம், ஆரோக்கியசேவியர், தியாகராஜன், கந்தப்பா உள்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.